ஆரேகாலனிக்கு வெளியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் - உத்தவ் தாக்கரே தகவல்


ஆரேகாலனிக்கு வெளியில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் - உத்தவ் தாக்கரே தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:08 AM GMT (Updated: 1 Oct 2021 12:08 AM GMT)

ஆரேகாலனிக்கு வெளியில் மட்டும் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் கொலபா- சீப்ஸ் இடையே மெட்ரோ ரெயில் 3-வது திட்டப்பணிகள் நடந்து வருகிறது. 33.5 கி.மீ. சுரங்கப்பாதையில் அமையும் இந்த மெட்ரோ திட்டத்திற்கு கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஆரே காலனியில் பணிமனையை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆரேகாலனியில் பணிமனை அமைக்கப்பட்டால், இயற்கை வளம் பாதிக்கப்படும் என அதை சிவசேனா அரசு காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றியது.

இந்த முடிவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து காஞ்சூர்மார்க் நில விவகாரத்தில் மத்திய, மாநில அரசு இடையே மோதல் வெடித்தது.

இந்தநிலையில் மெட்ரோ ரெயில் 3-வது திட்டத்திற்கான சோதனை ஓட்டம் ஆரேகாலனிக்கு வெளியில் மரோல்-மரோஷி இடையே நடைபெறும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்திற்காக ஆரே காலனியில் ஒரு மரம் கூட பாதிக்கப்பட கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மெட்ரோ 3-வது வழித்தடத்திற்கான சோதனை ஓட்டம் ஆரேகாலனிக்கு வெளிப்பகுதியில் அமைந்து உள்ள மரோல்-மரோஷி இடையே சுரங்கப்பாதையில் நடைபெறும்.

ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் தொழில்நுட்ப சோதனைகள் முடிந்து உள்ளது. தற்போது அவை 10 ஆயிரம் கி.மீ. சோதனை ஓட்டத்திற்காக மும்பை கொண்டு வரப்பட உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பிறகு அந்த ரெயில் கொலபா- சீப்ஸ் இடையே இயக்கப்படும். இதேபோல சோதனைக்கு பிறகு மேலும் அதுபோன்ற 31 மெட்ரோ ரெயில்கள் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story