டெல்லி விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்


டெல்லி விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 1 Oct 2021 12:20 PM GMT (Updated: 2021-10-01T17:50:24+05:30)

போராட்டம் நடைபெறும் இடத்தில் வசிக்கும் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

புதுடெல்லி,

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்தது. இவற்றுக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். முதலில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் நாடு முழுவதும் பரவியது.

விவசாயிகள், தலைநகரம் டெல்லிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடமாக இந்த முற்றுகை நீடித்து வருகிறது. டெல்லி நகரை வெளிமாநிலங்களில் இருந்து இணைக்கும் சாலைகளான காஜிப்பூர், சிங்கு, திக்ரி ஆகிய எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுடன் மத்திய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்கியே தீர வேண்டும். வேறு எந்த தீர்வையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகள் கூறி விட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்றது. ஆனாலும் அதை பொருட்படுத்தாத விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

போராட்டத்தை நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் ஐந்தர் மந்தரில் அமைதியான முறையில் நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தை நடத்த இருக்கிறோம். எனவே அனுமதி தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான பெஞ்சு விசாரணை நடத்தியது.

அப்போது விவசாயிகள் சங்கம் சார்பில் நாங்கள் டெல்லிக்குள் போராட்டம் நடத்தினால் தான் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று கருதுகிறோம்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த அடிப்படையில் அனுமதி தர வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு நீதிபதிகள் விவசாய சங்கத்தினரை கடுமையாக கண்டித்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

நீங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாக கூறுகிறீர்கள். இதுவரை அமைதியாகத்தான் போராட்டம் நடத்தினீர்களா? டெல்லி நகரையே கழுத்தை நெறிப்பது போல் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறீர்கள்.

நெடுஞ்சாலைகளை மறியல் என்ற பெயரில் முடக்குகிறீர்கள். இதனால் மக்களுக்கு எவ்வளவோ இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. உங்கள் போராட்டம் வன்முறையாகவும் மாறி இருக்கிறது. அரசு மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்துகிறீர்கள்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் வசிக்கும் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். உங்கள் போராட்டத்துக்காக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

உங்கள் செயல்பாடுகள் சரியானதுதானா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். எல்லையில் போராட்டம் நடத்தும்போதே எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டன.

நீங்கள் இப்போது நகரின் மைய பகுதியில் வந்து போராட்டம் நடத்துவதாக கூறுகிறீர்கள். அவ்வாறு போராட்டம் நடத்தினால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறுகள் ஏற்படும்.எனவே எப்படி உங்களுக்கு அனுமதி தர முடியும்?

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

அப்போது விவசாயிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை நாங்கள் தடுக்கவில்லை. போலீஸ் தான் எங்களை கைது செய்து, பிரச்சினைகளை உருவாக்கியது என்று கூறினார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story