விவசாயிகளின் போராட்டத்தால் மொத்த டெல்லியும் திணறல் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து


விவசாயிகளின் போராட்டத்தால் மொத்த டெல்லியும் திணறல் - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 1 Oct 2021 6:56 PM GMT (Updated: 1 Oct 2021 6:56 PM GMT)

விவசாயிகளின் போராட்டத்தால் மொத்த டெல்லியும் திணறுவதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட அனுமதி கோரி விவசாயிகள் அமைப்பான கிசான் மகா பஞ்சாயத்து மனு தாக்கல் செய்ததது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், தலைநகர் டெல்லி மொத்தத்தையும் திணறடிக்கவிட்டு, டெல்லிக்குள் வந்து போராட திட்டமிடுகிறீர்களா? கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துவிட்டு, ஜந்தர் மந்தரில் சத்தியாகிரக அடிப்படையில் போராடுவதில் என்ன அர்த்தமுள்ளது? நீதிசார் முறைக்கு எதிராக போராடுகிறீர்களா? கோர்ட்டை நம்புங்கள் என்றனர்.

கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் அமைப்பு டெல்லி, அதன் அண்டை மாநிலங்களில் சாலைகளை மறித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் போராட்ட குழுவில் இல்லை என வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், நெடுஞ்சாலைகளை மறித்து நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துவிட்டு அனுமதி கோர கிசான் மகா பஞ்சாயத்து அமைப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story