ஆப்கானிஸ்தான் நிலவரம்: ‘பிராந்தியத்தைத்தாண்டி விளைவுகளை ஏற்படுத்தும்’ - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்


ஆப்கானிஸ்தான் நிலவரம்: ‘பிராந்தியத்தைத்தாண்டி விளைவுகளை ஏற்படுத்தும்’ - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 1 Oct 2021 8:07 PM GMT (Updated: 1 Oct 2021 8:07 PM GMT)

ஆப்கானிஸ்தான் நிலவரம் பிராந்தியத்தைத்தாண்டி விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

அமெரிக்க, இந்திய பாதுகாப்பு கூட்டாண்மை மன்றத்தின் வருடாந்திர உச்சி மாநாடு காணொலிக் காட்சி வழியாக நேற்று நடந்தது.

இதில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார். அவர், முன்னாள் அமெரிக்க தூதர் பிராங்க் விஸ்னருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தலீபான்கள் சில வாக்குறுதிகளை அளித்தனர். அதில் பல அம்சங்களில் எங்கள் நம்பிக்கை எடுத்துக்கொள்ளப்படவில்லை. தோஹாவில் என்ன உடன்பாடு ஏற்பட்டிருந்தாலும், அதில் தொடர்புடைய ஒருவருக்கு பரந்த அறிவு இருக்க வேண்டும். அதையும் கடந்து, அங்கு எல்லா தரப்பினரையும் கொண்ட ஒரு அரசை நாம் காண முடியுமா என்பது உங்களுக்கு தெரியுமா? 

அங்கு பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறுபான்மையினருக்கு மதிப்பு கிடைப்பதை நாம் காணப்போகிறோமா? ஆப்கானிஸ்தான் மண், பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு பயன்படுத்தப்படாது என்பதை நாம் பார்க்கப்போகிறோமா? ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரங்கள், பிராந்தியத்திலும், பிராந்தியத்தைத் தாண்டியும் மிக மிக குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story