2-ம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார் - குப்பை இல்லா நகரங்களை உருவாக்க நடவடிக்கை


2-ம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார் - குப்பை இல்லா நகரங்களை உருவாக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2021 12:16 AM GMT (Updated: 2 Oct 2021 12:16 AM GMT)

2-ம் கட்ட தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டம் (அம்ருத் 2.0) ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தூய்மையை உறுதி செய்யும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய பா.ஜனதா அரசு கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கழிவறைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக நகர்ப்புறங்களின் தூய்மையை மேம்படுத்தும் வகையில் 2-ம் கட்ட துய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ‘தூய்மை இந்தியா திட்டம் - நகர்புறம் 2.0’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

அத்துடன் கழிவுநீரகற்றல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வினியோகத்துக்கான, புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டத்தையும் (அம்ருத் 2.0) அவர் தொடங்கி வைத்தார்.

டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2-ம் கட்ட தூய்மை இந்தியா திட்டமும், அம்ருத் 2.0 திட்டமும் குப்பை இல்லா நகரங்களையும, பாதுகாப்பான குடிநீர் வினியோகத்தையும் உறுதி செய்யும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சி அம்பேத்கர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது நமது பாக்கியம். சமத்துவமின்மையை அகற்ற நகர்ப்புற வளர்ச்சி முக்கியமானது என்று பாபாசாகேப் நம்பினார். அந்தவகையில் இந்த திட்டங்களின் 2-ம் கட்டங்கள் அவரது கனவை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

சிறந்த வாழ்வுக்கான கனவுடன் ஏராளமான மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் சில நேரங்களில் கிராமங்களை விட மோசமாகவே இருக்கிறது.

அவர்கள் வீட்டை விட்டு விலகி இருப்பதால் இது இரட்டை வேடம் போலும். இந்த நிலையை மாற்றுவதில் பாபாசாகிப்பின் கனவு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பணிகளின் புதிய கட்டங்களின் கீழ், நகரங்களில் உள்ள குப்பை மலைகள் பிரித்தெடுக்கப்பட்டு முற்றிலும் அகற்றப்படும்.

தூய்மை பிரசாரத்தை வலுப்படுத்த இளம் தலைமுறையினர் முயற்சி எடுத்துள்ளனர். சாக்லேட் கவர்களை வெளியே வீசக்கூடாது, மாறாக பையிலேயே வைத்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுவெளியில் குப்பைகளை வீசக்கூடாது என பெரியவர்களை சிறு குழந்தைகள் தற்போது அறிவுறுத்துகின்றனர்.

தூய்மையை பேணுவது வெறும் ஒருநாளுக்கான நடவடிக்கையோ அல்லது 15 நாட்கள், ஒரு ஆண்டுக்கான நடவடிக்கையோ, ஒரு நபருக்கான பணியோ அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 15 நாட்களும், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொருவருக்கும் என மாறி ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறை என தொடர வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஹர்தீப் சிங் புரி, கவுஷல் கிஷோர் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

2-ம் கட்ட தூய்மை இந்தியா மற்றும் அம்ருத் 2.0 திட்டங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாட்டின் அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாமலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையிலும் பராமரிப்பதே தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டங்களின் நோக்கம் ஆகும்.

வேகமான நகரமயமாக்கும் சவால்களை இந்தியா திறம்பட எதிர்கொள்வதில் இந்த பணிகள் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவதுடன், நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030-ஐ எட்டுவதற்கும் பங்களிப்பை வழங்கும்.

இதில் 2-ம் கட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் செலவு ரூ.1.41 லட்சம் கோடி ஆகும். இதைப்போல அம்ருத் 2.0 திட்டம் ரூ.2.87 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story