உ.பி. வன்முறை: விவசாயிகள் உட்பட 8 பேர் பலி


உ.பி. வன்முறை: விவசாயிகள் உட்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 3 Oct 2021 3:20 PM GMT (Updated: 3 Oct 2021 3:50 PM GMT)

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு சென்ற துணை முதல்-மந்திரிக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை மந்திரியின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாயினர்.

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர் உ.பி.,யின் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியா. அங்கு இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.

 இதனையறிந்த விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட திரண்டனர். அப்போது மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்-மந்திரியை  வரவேற்க தனது காரில் சென்றுள்ளார்.அவரது காரையும் மறித்து காரின் முன் திரண்டு விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.

அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை  ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் விவசாயிகள் சிலர் படுகாயமடைந்தாகவும். மூவர் உயிரிழந்ததாக பாரதிய விவசாயிகள் சங்கம் தனது டுவிட்டர் பதிவில் தகவலை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் உட்பட சில கார்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் திக்குனியா கிராமம் கலவர பூமியானது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.ஜி.பி., பிரசாந்த் குமாரை அனுப்பினார்.  முன்னாள் முதல் - மந்திரி  அகிலேஷ் யாதவ், "அமைதியாக போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை மந்திரியின் இச்செயல் மனிதாபிமானமற்றது, கொடூரமானது." என கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போரட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என மத்திய இணை மந்திரி அஜஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  மேலும் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த கல்வீச்சில்  பாஜகவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அஜஸ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

மத்திய இணை மந்திரியின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தாக புகார் எழுந்துள்ளது. 

மத்திய மந்திரி இணை மந்திரி அஜய் மிஸ்ராவை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவும், அவரது மகனை கைது செய்யவும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் வன்முறை நிகழ்ந்த நிலையில் நாளை லக்கிம்பூர் செல்கிறார் காங்கிரசின் பிரியங்கா காந்தி.Next Story