தடுப்புகாவலில் பிரியங்கா காந்தி: துடைப்பத்தை எடுத்து அறையை சுத்தம் செய்தார்!


தடுப்புகாவலில் பிரியங்கா காந்தி: துடைப்பத்தை எடுத்து அறையை சுத்தம் செய்தார்!
x
தினத்தந்தி 4 Oct 2021 10:41 AM GMT (Updated: 4 Oct 2021 10:41 AM GMT)

லக்கிம்பூரில் விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கும் போது அந்த அறையை துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று நடந்த விவசாய போராட்டத்தின் போது விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று லக்கிம்பூரில் கேரி மாவட்டத்தின் திகுனியாபகுதியில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா, துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளும் பாஜக கட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் விவசாயிகள் போராட்டம் செய்தனர். அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்தனர்.

இந்த போராட்டத்தின் போது அங்கு வந்த பாஜகவினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் லியானதாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் கார் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் அறிந்தவுடன் நேற்று டெல்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் வந்தார். லக்கிம்பூரில் உள்ள கிராமத்திற்கு பிரியங்கா காந்தி செல்ல முயன்ற போது அவர் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். சிதாபூர் என்ற கிராமத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டார்.

பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதி இன்றி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நீங்கள் எந்த அடிப்படையில் என்னை கைது செய்கிறீர்கள். உங்களிடம் வாரண்ட் இருக்கிறதா? இல்லையென்றால் உங்கள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்வேன் என கூறினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதில் என்ன தவறு. என்னை நீங்கள் தொட கூடாது என்று பிரியங்கா காந்தி போலீசாரிடம் நேற்று வாக்குவாதம் செய்த வீடியோவும் வெளியானது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரியங்கா காந்தி, நாம் இருக்கும் அறையை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். அது அரசு அறையாக இருந்தாலும் சரி. என்னுடைய அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் நான் அறையை சுத்தம் செய்தேன், என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story