தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு கேரளாவில் 23 பேர் பலி - மீட்பு பணியில் முப்படையினரும் தீவிரம்


தொடரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு கேரளாவில் 23 பேர் பலி - மீட்பு பணியில் முப்படையினரும் தீவிரம்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:52 PM GMT (Updated: 17 Oct 2021 7:52 PM GMT)

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.

திருவனந்தபுரம்,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

இதன் தொடர்ச்சியாகநேற்றும் அங்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும்வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாநிலத்தின் பிரதான அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல அணைகளில் அபாய அளவை தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலம்புழா, மலங்கரா, நெய்யாறு, அருவிக்கரா, வாளையாறு, போதுண்டி, புள்ளியாய், பரம்பிக்குளம், காஞ்சிரபுழா உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து திறந்த வெள்ளத்தால் முக்கிய ஆறுகள் அனைத்திலும் வெள்ள நீர் கரை கடந்திருக்கிறது.

இதனால் கரையோரங்களில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. இதைப்போல வயல்வெளிகள், விவசாய நிலங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.

மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்பட்ட மழை-வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள தற்போதைய மழை சேதங்களும் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையையும் முடக்கி போட்டுள்ளது.

இதற்கிடையே கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களின் உயிர்களையும் காவு வாங்கி வருகின்றன. அந்தவகையில் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.

இதில் கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் அருகே உள்ள குட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் அங்கிருந்த பல வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் வசித்து வந்த பலரும் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதில் நேற்று காலை வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இதைப்போல இடுக்கி மாவட்டத்தின் கொக்கையார் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் வசித்து வந்த மக்களும் உயிருடன் புதைந்தனர். இதில் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

அங்குள்ள தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் நேற்று முன்தினம் பலியாகி இருந்தனர்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை நேற்று 23ஆக அதிகரித்தது. இன்னும் 20-க்கு மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும்பணி நடந்து வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. அதன்பேரில் முப்படையினரும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காககளமிறங்கி உள்ளனர்.

அந்தவகையில் கோட்டயம் மாவட்டத்தின் குட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு உள்ளனர். அங்கு இன்னும் சிலரை காணாததால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ராணுவத்துக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் கோவையில் இருந்து திருவனந்தபுரம் விரைந்துள்ளன.

இதைப்போல ஐ.என்.எஸ். கருடா கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று நிவாரண பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு இந்த ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விமானப்படையை சேர்ந்த 2 எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரம் சங்குமுகம் விமானப்படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தின் மல்லப்பள்ளியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வெள்ள பாதிப்பு அதிகம் நிறைந்த பகுதிகளில் ராணுவ வீரர்களுடன், விமானப்படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விமானப்படையின் தெற்கு பிராந்திய தளங்கள் அனைத்தும் மீட்பு பணிகளுக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இது மட்டுமின்றி தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி பத்தனம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில், இந்த படையை சேர்ந்த 11 குழுக்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

மழை, வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காக 105 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பேய்மழை கொட்டிய நிலையில், அதன் தீவிரம் நேற்று சற்று தணிந்தது. இதனால் பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடிந்தது. அதேநேரம் சில பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை, இந்த பணிகளை வெகுவாக பாதித்தது.

கேரளாவின் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதிலும் திருவனந்தபுரம், கொல்லம, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இதைப்போல மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து பம்பை நதி உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்றும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் பல அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், 9 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி அந்த அணைகளில் நீர் திறக்கப்படும் ஆறுகளின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை உடனடியாக மீட்க அதிகாரிகளை அறிவுறுத்திய அவர், நிவாரண உதவிகளையும் வேகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மழை-வெள்ளத்தால் மாநிலத்தில் மோசமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கேரளாவின் மழை-வெள்ள நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வருவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இந்த பேரிடரை சமாளிப்பதற்கு மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story