உ.பி. மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், மின் ஸ்கூட்டர்... பிரியங்கா காந்தி வாக்குறுதி


உ.பி. மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன், மின் ஸ்கூட்டர்... பிரியங்கா காந்தி வாக்குறுதி
x
தினத்தந்தி 21 Oct 2021 9:59 AM GMT (Updated: 21 Oct 2021 10:13 AM GMT)

உத்தரபிரதேசத்தில் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 114 இடங்களில் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இதனை தொடர்ந்து, இந்த முறை உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

வரும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40 சதவீதம் பெண் வேட்பாளர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்படும் என பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் கூறி உள்ளார்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டு உள்ளார்.  அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேசத்தில் அடுத்த அரசு அமைக்கும் பட்சத்தில், மாணவிககளுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது பதிவில், சில பள்ளி மாணவிகளை சந்தித்தேன்...  படிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்மார்ட்போன்கள் தேவையாக உள்ளன என என்னிடம் கூறினார்கள்.

தேர்தல் அறிக்கை குழுவின் ஒப்புதலுடன் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.  அதன்படி, பள்ளி படிப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்களும் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மின் ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் அறிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story