ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு


ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 1:04 PM GMT (Updated: 21 Oct 2021 1:10 PM GMT)

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 3-ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, போதை விருந்து நடத்தியதாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டவர்களும் சிக்கினர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர்.

இதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிராகரித்து உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் போதைப்பொருள் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் மனு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாட்டீல் முன்னிலையில் நடந்து வந்தது. அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் கடத்தல் மற்றும் சதி குற்றச்சாட்டு அபத்தமானது. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்றார்.

ஆனால் இதை மறுத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு வக்கீல், “ஆர்யன் கான் சில வருடங்களாக போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளார். போதைப்பொருள் வாங்குவதற்காக சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார். வாட்ஸ் அப் உரையாடல் மூலம் அவர் அதிகளவில் போதைப்பொருள் வாங்கியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆர்யன் கானிடம் இருந்து நேரடியாக போதைப்பொருள் சிக்காவிட்டாலும், உடன் இருந்த அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்திடம் இருந்து 6 கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஜாமீனில் வெளியே சென்றால் ஆர்யன் கான் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று ஜாமீன் மனு மீது தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் ஆர்யன் கான் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

2 கோர்ட்டுகளில் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் ஆர்யன் கான் தரப்பு மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டு உள்ளது. இது அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த் ஆகியோர் தற்போது மும்பை ஆர்தர் தோடு சிறையிலும், மாடல் அழகி முன்முன் தமேச்சா பைகுல்லா பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story