செல்போன் ரீசார்ஜ்க்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய போன்பே..!


செல்போன் ரீசார்ஜ்க்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய  போன்பே..!
x
தினத்தந்தி 23 Oct 2021 9:51 AM GMT (Updated: 23 Oct 2021 9:51 AM GMT)

கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் என போன்பே தெரிவித்துள்ளது.

மும்பை,

வால்மார்ட் குழுமத்துக்கு  சொந்தமான  போன்பே இந்தியாவில் முன்னணி  ஆன்லைன் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். போன்பே தளத்தில் இருந்து யுபிஐ வழியாக  நடைபெறும் பரிவர்த்தனைகள் மூலம் செல்போன் ரீஜார்ஜ், டிடிஎச், மின்சார கட்டணம் என பல்வேறு கட்டணங்களை இதன் மூலம் எளிதில் செலுத்த முடியும் என்பதால் நாளுக்கு நாள் பொதுமக்கள் இத்தகைய நிறுவனங்கள் மூலமாக கட்டணங்களை செலுத்துவது அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. பயனர்களை கவர்வதற்காக ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனங்கள், கேஷ் பேக் ஆஃபர்களையும் அள்ளி விடுகின்றன. 

இந்த நிலையில், 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என போன்பே அறிவித்துள்ளது அதன் பயனர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இந்தியாவில் மொபைல் ரீஜார்ஜ்களுக்கு செயல்முறைகளுக்கு  கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியிருக்கும் முதல் நிறுவனம் போன்பே என்று கூறப்படுகிறது. 

ஆனால், இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ரீசார்ஜ்களை பொறுத்தவரை நாங்கள் மிக சிறிய அளவிலான பரிசோதனையை தொடங்கியுள்ளோம். 50 -ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையாது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இணைய தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. பிற நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளைகளுக்கு கட்டணம் வசூலித்து வருவதை போன்றே நாங்களும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை தொடங்கியுள்ளோம். 

பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலித்துவருகிறது. நாங்கள் கிரெடி கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம்" என்றார்.  மேலும், போன் பே மூலமாக மேற்கொள்ளப்படும் பிற பரிவர்த்தனைகள் மற்றும் பணப்பரிமாற்றங்களுக்கு  எந்த வித கட்டணம் வசூலிக்கப்படாத நிலையே தொடரும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story