நடிகை கங்கனா ரணாவத் மீது கீழ்கோர்ட்டு பாரபட்சம் காட்டவில்லை: கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு


நடிகை கங்கனா ரணாவத் மீது கீழ்கோர்ட்டு பாரபட்சம் காட்டவில்லை: கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு
x
தினத்தந்தி 23 Oct 2021 9:31 PM GMT (Updated: 23 Oct 2021 9:31 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பாரபட்சம் எதுவும் காட்டவில்லை என்று கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கூறியுள்ளது.

மனு தள்ளுபடி

பாடலாசிரியர் ஜாவித் அக்தர், நடிகை கங்கனா ரணாவத் மீது அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கங்கனா ரணாவத் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கங்கனா அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு எஸ்.டி. தன்டே முன் நடந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, நடிகை கங்கனா வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

சட்டத்தின்படி செயல்பட்டுள்ளது

இது தொடர்பாக கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு தெரிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கங்கனா மீது கீழ் கோர்ட்டு பாரபட்சம் காட்டவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. அதுபற்றி கூடுதல் தலைமை மாஜிஸ்ரேட்டு கூறுகையில், “அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்டவருக்கு (கங்கனா ரணாவத்) விசாரணையில் ஆஜராகாமல் இருக்க நியாயமாக அனைத்து விலக்குகளையும் அளித்து உள்ளது. மெட்ரோபாலிட்டன் கோர்ட்டின் அனைத்து உத்தரவுகளையும் ஆய்வு செய்தேன். அந்த மாஜிஸ்திரேட்டு சட்டத்தின்படி தான் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளாா். மேலும் அந்தோி கோர்ட்டின் உத்தரவுகளையெல்லாம் செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்து உள்ளது. தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கங்கனா ரணாவத்தின் மனுவை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்து உள்ளது.

இதன் மூலம் அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சட்டத்தின்படி செயல்பட்டதை காட்டுகிறது. கோர்ட்டு மனுதாரருக்கு எதிராக பாரபட்சமாக நடக்கவில்லை.. எனவே பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இந்த வழக்கு மாற்றப்பட்டால், அது விசாரணை அதிகாரியின் மனஉறுதியை பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story