கர்நாடகா: ஒரே பள்ளிக்கூடத்தில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகா: ஒரே பள்ளிக்கூடத்தில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 28 Oct 2021 8:44 AM GMT (Updated: 28 Oct 2021 8:44 AM GMT)

கர்நாடாக மாநிலம் குடகு மடிகேரி பகுதியில் உள்ள பள்ளி கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம்  குடகில் உள்ள மடிகேரியில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 33 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடரந்து  பள்ளி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கூடத்தில் சில மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து  அங்குள்ள 287 மாணவர்களிடமும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது  33 மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

கொரோனா பரிசோதனை செய்த பெரும்பாலான மாணவர்கள் அறிகுறியற்றவர்கள். மற்ற மாணவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட சுகாதார அதிகாரி இன்று  பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என கூறி உள்ளார்.

கர்நாடகாவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6 ந்தேதியும்,  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 ந்தேதியும்  அரசுப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

1 முதல் 5 ஆம் வகுப்புகளில் இரண்டு டோஸ் கொரோனா  தடுப்பூசி போடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 29.86 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 8,430 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story