திருமணம் செய்துகொள்ள மறுப்பு: இளைஞரின் முகத்தில் ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்...!


திருமணம் செய்துகொள்ள மறுப்பு: இளைஞரின் முகத்தில் ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்...!
x
தினத்தந்தி 21 Nov 2021 10:54 AM IST (Updated: 21 Nov 2021 10:54 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரின் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35). ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பலமாதங்களாக பேஸ்புக்கில் பேசிவந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசிவந்தனர்.

இந்த நிலையில் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை சமரசம் பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார்.அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றார். அடிமாலி சென்றதும் அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசினர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசினார். இதில் அருண் குமாரின் முகத்தில் ஆசிட் பட்டு எரிந்தது. அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்தனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர். அருண்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது ஆசிட் வீசியதாகவும் கூறினார்.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கேரளாவில் திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரின் மீது 2 குழந்தைகளின் தாய் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story