பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 29 Nov 2021 12:24 AM GMT (Updated: 29 Nov 2021 12:24 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி, 

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே, கடந்த 19-ந் தேதி டெலிவிஷனில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து விட்டது.

பிரச்சினைகள்

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடக்கிய ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் இன்னும் நீடிக்கிறது. அந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு விலை, ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. அருணாசலபிரதேசத்தில் சீன ராணுவம் கிராமங்களை உருவாக்கி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மேற்கு வங்காளம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருவான ‘ஒமிக்ரான்’ என்ற புதிய கொரோனா, இந்தியாவுக்கு வராமல் தடுப்பதில் மத்திய அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

இன்று தொடங்குகிறது

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர்.

தாக்கல்

அதன்படி, இன்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ‘‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளில் ஒரு சிறு குழு மட்டும் போராட்டம் நடத்தி வந்த போதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்வது இந்த நேரத்தில் அவசியம்’’ என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து கட்சிகளும் இம்மசோதாவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

மசோதாவை ஆதரித்தாலும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டும் என்ற விவசாயிகளின் இதர கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது. இதனால், சபையில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 மசோதாக்கள்

இதுதவிர, 25 மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு பட்டியல் தயாரித்துள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்படுபவை.

போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள். தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. பட்டியலை மாற்றி அமைப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாக்கள், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்தை திருத்துவதற்கான மசோதா, திவால் சட்ட (இரண்டாவது திருத்தம்) மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா ஆகியவை இந்த மசோதாக்களில் முக்கியமானவை.

அனல் பறக்கும்

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையும் இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதுதவிர, சமையல் எரிவாயு விலை உயர்வு, சீன ஆக்கிரமிப்பு, எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரம், ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று தெரிகிறது. இதனால், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

இதற்கிடையே, குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

மத்திய அரசு சார்பில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா (3 பேரும் காங்கிரஸ்), சுதீப் பந்தோபாத்யாயா, டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (இருவரும் தி.மு.க.), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), விநாயக் ரவத் (சிவசேனா), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), சஞ்சய்சிங் (ஆம் ஆத்மி), சதீஷ் மிஸ்ரா (பகுஜன் சமாஜ் கட்சி), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), பிரசன்ன ஆச்சார்யா (பிஜு ஜனதாதளம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில், பெகாசஸ் உளவு விவகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்தன. எல்லை பாதுகாப்பு படை கூடுதல் அதிகாரத்துக்கு எதிராகவும் விவாதிக்குமாறு வலியுறுத்தின.

விவாதிக்க தயார்

கொரோனாவுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும், விவசாயிகள் போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக சட்டம் கொண்டு வருமாறும், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு எதிராக சட்டம் கொண்டு வருமாறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.

விவசாயிகள் பிரச்சினை குறித்து பேச அனுமதிக்காததால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில், 31 கட்சிகள் சார்பில் 42 எம்.பி.க்கள் பங்கேற்றதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இரு அவைகளின் தலைவர்களும் அனுமதிக்கும் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Next Story