டெல்லியில் புதிய வாகனங்களை வாங்கி ஓட்ட கூச்சப்படும் பெண்கள்...வண்டியின் எண் அப்படி...?
டெல்லியில் தீபாவளி பரிசாக தந்தை வாங்கி தந்த இருசக்கர வாகனத்தை ஓட்ட இளம்பெண் கூச்சப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
டெல்லி,
டெல்லியில் தற்போது புதியதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களில் பதியப்படும் வாகனப் பதிவெண்களின் அர்த்தம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.புதிய இருசக்கர வாகனம் வாங்கும் உரிமையாளர்கள் வாகன பதிவெண்களில் உள்ள ஆங்கில வார்த்தைகள் தங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் முகம் சுளிப்பதற்கான காரணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்படும் பதிவெண் தகடுகளில் 'செக்ஸ்' (SEX)என்ற எழுத்துக்கள் இடம்பெற்று இருப்பதுதான் என கூறப்படுகிறது
இந்தியாவில் மாவட்டங்கள் மற்றும் வாகன வகைகளின் அடிப்படையில் பதிவெண் வழங்கப்படுகிறது. அதன்படி வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளில் கறுப்பு நிறத்தில் எண்கள் இருந்தால் தனி நபரின் வாகனம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் டெல்லியிலும் வாகனங்களுக்கு பதிவெண் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியை பொறுத்த முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது.
பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும். அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்பது காரையும் S என்பது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். அடுத்து வரும் எழுத்து மற்றும் எண்கள் வழக்கமான தொடர்ச்சி எண்களாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது வந்துள்ள எழுத்துக்கள்தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் ஒரு இளம்பெண் தீபவாளி பரிசாக தந்தையிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார். ஆனால் தற்போது அதை பயன்படுத்த முடியவில்லை. அதற்கு காரண்ம் அதில் இருந்த பதிவெண்கள்தான்.DL35SEX0000 என்பதுதான் அந்த பெண்ணின் வாகனத்தில் இருந்த பதிவெண்.
இந்த எண்களை ஒன்றாக சேர்த்து பார்த்தால் எதுவும் தெரியாது. ஆனால் பிரித்துப் படித்தால் எல்லாருமே முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. அதற்கு காரணம் இந்த எண்களில் இடையில் உள்ள "செக்ஸ்" எனும் எழுத்துக்கள்தான். அந்த பதிவெண்ணை பார்த்து மற்றவர்கள் கேலி செய்ததால் தந்து இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் ஓரங்கட்டி விட்டார் அந்த பெண்.
இதை அடுத்து சம்பந்தப்ட்ட பதிவெண்ணை மாற்றித் தருமாறு அந்த பெண்ணின் தந்தை இருசக்கர வாகன விற்பனையாளரை அணுகி உள்ளார் .அதற்கு அந்த நபர், இதுபோன்ற எண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லியில் ஆயிரக்கணக்கில் ஓடுவதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த பதிவெண் ஆன்லைனில் வந்ததால் மாற்றித் தர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த டெல்லி போக்குவரத்து ஆணையர் கேகே தஹியா, ஒரு வாகனத்திற்கு வழங்கப்பட்ட எண்ணை மாற்றித் தருவது சாத்தியமல்ல என்றும் பதிவெண் வழங்குவதில் வரிசை எண் அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story