சரத் பவாருடன் மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு


சரத் பவாருடன்  மே.வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 12:28 PM GMT (Updated: 1 Dec 2021 12:28 PM GMT)

இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது

மும்பை,

தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரசை முன்னிறுத்த அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். 
இதற்காக தேசிய அரசியலில் தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்தும் வேலையிலும், காங்கிரசுக்கு மாற்று சக்தியாக தங்களை முன்னிறுத்தும் வேலையிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதற்காக பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவுகளையும் பெற மம்தா திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, நேற்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்செய் ராவத் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது.  இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சரத் பவார் கூறியதாவது:  வலுவான மாற்று சக்தியை  நாம் உருவாக்க  வேண்டியுள்ளது. தேர்தலை குறிவைத்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம்.
எங்களது சந்திப்பு ஆரோக்கியமானதாக இருந்தது” என்றார். 

பாஜகவுக்கு எதிரான வலுவான  மாற்று கூட்டணியில் காங்கிரஸ் இணைக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சரத் பவார், பாஜகவை எதிர்க்கும் அனைவரையும் இதில்  இணைய வரவேற்போம்” என்றார். 

Next Story