செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தவும், மேற்பார்வையிடவும் இந்த மசோதா வகை செய்கிறது.
புதுடெல்லி,
செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இம்மசோதா வகை செய்கிறது.
மேலும், நாடு முழுவதும் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்தவும், மேற்பார்வையிடவும் அந்த மையங்களுக்கும், இத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களுக்கும் தேசிய பதிவு ஆணையம் அமைக்க இந்த மசோதா வழி வகுக்கிறது.
மசோதாவை தாக்கல் செய்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது, “நாடு முழுவதும் ஏராளமான செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எவ்வித ஒழுங்கு விதிகளுக்கும் உட்படாமல் இயங்கி வருகின்றன. செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் உடல்நிலையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய மசோதாவை கொண்டு வருவது அவசியம் ஆகிறது.
இந்த மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு பல்வேறு சிபாரிசுகளை தெரிவித்தது. மத்திய அரசு அவற்றை பரிசீலித்து, இறுதியாக இம்மசோதாவை உருவாக்கி இருக்கிறது”
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ஹீனா கேவிட் பேசியதாவது, “80 சதவீத செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்யப்படவில்லை. செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கும், கருமுட்டை, விந்தணு வங்கிகளுக்கும் குறைந்தபட்ச நன்னடத்தை விதிமுறைகள், இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
செயற்கை கருத்தரிப்புக்கு வரும் தம்பதிகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கருமுட்டை தானமாக வழங்குபவர்கள், அதை பெறுபவர்களும் மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
கருமுட்டை விற்பனையில் ஈடுபடுபவர்கள், முதல் தடவை தவறு செய்திருந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் பிடிபட்டால், அவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்”
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story