முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்..? இன்று முக்கிய ஆலோசனை


முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்..? இன்று முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 4 Dec 2021 5:45 AM GMT (Updated: 4 Dec 2021 5:45 AM GMT)

ஓராண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை நிறைவு செய்யலாமா என்பது குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது.

புதுடெல்லி,

40 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பாக இருக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் (எஸ் கே எம்) விவசாயிகள் போராட்டம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இன்று கூடுகிறது. 

மூன்று வேளான் சட்டங்களும் நாடாளுமன்றத்தில் முறையாக வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று நடைபெற உள்ளது.டெல்லி மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் சிங்கு எல்லையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஓராண்டு காலத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை நிறைவு செய்யலாமா என்பது குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

இன்னும் நிலுவையில் இருக்கும் விவசாயிகளின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சட்டரீதியான உத்தரவாதம், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல், போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

இந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஐந்து பேர் கொண்ட குழுவில் இடம்பெற உள்ளோரின் பெயர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கேட்டிருந்தது. விவாத குழுவில் இடம்பெறுவோர் யார் என்பதும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக பிரதமருக்கு கிசான் மோர்ச்சா சங்கம் கடிதம் எழுதியிருந்தது. அதில் விவசாயிகளின் போராட்டத்தை கைவிடும் முன், நிபந்தனைகளாக ஆறு முக்கிய கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story