பிளவுஸ் தைக்க மறுத்த கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி...!


பிளவுஸ் தைக்க மறுத்த கணவன்.. தற்கொலை செய்துகொண்ட மனைவி...!
x
தினத்தந்தி 6 Dec 2021 7:12 AM IST (Updated: 6 Dec 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் தன்னுடைய விருப்பப்படி கணவன் பிளவுஸ்  தைத்து கொடுக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது. 

35 வயதான விஜயலக்‌ஷ்மி தனது கணவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஐதராபாத்தின் ஆம்பர்பேட் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருடைய கணவர் வீடு வீடாகச் சென்று புடவை மற்றும் பிளவுஸ் துணிகளை வியாபாரம் செய்து வருபவர். வீட்டிலிருந்தும் துணிகளை தைத்துக் கொடுத்து வந்துள்ளார்.

அவர் தனது மனைவிக்காக நேற்று பிளவுஸ் ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த பிளவுஸ் அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.

கணவரிடம் பிளவுஸை தன்னுடைய விருப்பப்படி மீண்டும் தைத்து தருமாறு விஜயலக்‌ஷ்மி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால் விஜயலக்‌ஷ்மி மனமுடைந்துள்ளார்.  அதன்பின், கணவர் ஸ்ரீனிவாஸ் கடைக்கு சென்றுவிட்டார்.

பின் மாலை பள்ளி முடிந்து அவருடைய இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் படுக்கை அறை பூட்டி இருப்பதை கண்டு திறக்க முற்பட்டுள்ளனர். தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. உடனே ஸ்ரீநிவாசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அவர் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.  நீண்ட முயற்சிக்கு பின் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story