விவசாயிகள் போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - நாளை இறுதி முடிவு
விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து இறுதி முடிவு நாளை அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்பட உள்ளது.
டெல்லி,
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதனால், வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசுவேலை, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து வந்தனர். சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தலாம் எனவும், சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் இருவேறு நிலைப்பாட்டில் இருந்தனர்.
இந்நிலையில், விவசாய சங்கங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்த இறுதி முடிவு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான குல்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது நாளை தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story