ஒமைக்ரான் எதிரொலி; கர்நாடகத்தில் நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 20% குறைவு
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரது மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட பின்னர், கர்நாடக சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோர், கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
பெற்றோர்கள் 2 டோஸ் தடுப்பூசி போடாத நிலையில், மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகளை தொடர சில கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மாநிலத்தில் தொற்று அதிகரித்தால் பள்ளி, கல்லூரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story