‘பொதுமுடக்க காலத்தில் விவசாய பணிகள் சுமூகமாக நடைபெற்றன’ - வேளாண் துறை மந்திரி தகவல்
கொரோனா கால பொதுமுடக்கத்தின் போது வேளாண் துறை சார்ந்த பணிகள் சுமூகமாக நடைபெற்றன என்று மத்திய வேளாண் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, “கொரோனாவால் விவசாய குடும்பங்களின் மீது ஏற்பட்ட பாதிப்பை மத்திய அரசு உணர்ந்துள்ளதா?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் கூறுகையில், “கொரோனா கால பொதுமுடக்கத்தின் போது விவசாய துறை சார்ந்த பணிகள் சுமூகமாக நடைபெற்றன.
பொதுமுடக்கத்தின் போது விவசாய பணிகள் தொய்வில்லாமல் நடப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்திருந்தது. விவசாயம் மற்றும் அதனை சார்ந்த பணிகளுக்கு பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள், கடைகள் மற்றும் இதர விவசாயம் தொடர்பான நடவடிக்கைகள் பொதுமுடக்கத்தின் போது அனுமதிக்கப்பட்டன.
மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான விவசாய பொருட்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.”
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
முன்னதாக, விவசாய சகோதரர்கள் தங்கள் பேராட்டத்தை கைவிட்டு, வீடு திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story