புதுச்சேரி அரசு அறிவித்த மழை நிவாரணம் ரூ.5 ஆயிரம் அடுத்த வாரம் வழங்கப்படும்: ரங்கசாமி
புதுவை அரசு அறிவித்த மழை நிவாரணம் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டவட்டமாக கூறினார்.
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம்
புதுச்சேரியில் பெண்களுக்கென பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் மற்றும் கூடுதல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு போக்குவரத்து துறை சார்பில் சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
விழாவுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். அமைச்சர் சாய் சரவணன் குமார் முன்னிலை வகித்தார். போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பெண்கள் பழகுநர் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மிகவும் அவசியம்
வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கொண்டால் ஓட்டுனர் உரிமம் இருந்தால் எளிதாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போது பெண்கள் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வதை காண முடிகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருந்து ஆய்வக துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு 16 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதில் 11 பேர் பெண்கள். அவர்கள் மருந்தகங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பணி ஆணை வழங்கும் போது பெண்களிடம் ஆய்வுக்கு செல்ல முடியுமா? என்று கேட்டதற்கு, அனைவரும் இருசக்கர வாகனம் வைத்திருப்பதாக தெரிவித்தனர். பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது மட்டுமல்ல அதற்கு உரிமமும் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அடுத்த வாரம் நிவாரணம்
எங்கள் அரசு சொன்னதை செய்யும். நாங்கள் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பெரும் நஷ்டம் காரணமாக மூடப்பட்ட அரசு சார்பு நிறுவனங்களை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
மழை நிவாரணம் அறிவித்துவிட்டு கொடுக்கவில்லை என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். அறிவித்தவுடனே நிவாரணம் வழங்க முடியுமா? நிவாரணத்தை வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த வாரம் நிச்சயம் அனைவருக்கும் மழை நிவாரணம் கிடைக்கும். இது தொடர்பான கோப்பு ஒப்புதலுக்கு சென்றுள்ளது. நாங்கள் சொன்னதை கண்டிப்பாக செய்வோம். அதற்கு மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும்.
மாநில அந்தஸ்து
பிரதமர் மோடிக்கு எப்போதும் புதுவையின் மீது மிகுந்த அக்கறை உண்டு. புதுவையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியுமோ? அது குறித்து மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய அரசின் ஒத்துழைப்போடு புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம்.
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் எண்ணம். பிரதமரிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சந்திரபிரியங்கா
விழாவில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசுகையில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு பழகுநர் மற்றும் உரிமம் வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளிலும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு பழகுனர், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
புதுவையில் இதுவரை 4 லட்சம் பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர். அதில் 16 ஆயிரம் பெண்கள் மட்டுமே உள்ளனர். வாகனம் ஓட்டும் அனைத்து பெண்களும் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும்.
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகம் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களில் போக்குவரத்து கழகத்தில் இருந்த சில பிரச்சினைகளை தீர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சமாக இருந்த வருவாயை தற்போது ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளோம். இது எங்களுடைய முன்னேற்றத்திற்கான முதல்படி ஆகும் என்றார்.
விழாவில் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை ஆணையர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story