ஹெலிகாப்டர் விபத்து: ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: சிவராஜ் சிங் அறிவிப்பு


ஹெலிகாப்டர் விபத்து: ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: சிவராஜ் சிங் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 2:32 PM IST (Updated: 12 Dec 2021 2:32 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

போபால்,

நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதனிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நாயக் ஜிதேந்திர குமார் மத்தியப்பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்திலிருக்கும் தமண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். 3 பாரா சிறப்புப் படையைச் சேர்ந்த ஜிதேந்திர குமார், பிபின் ராவத்தின் முதன்மைப் பணியாளர் அதிகாரியாகவும் பணியாற்றிவந்தார். எட்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவந்த அவருக்கு, மனைவியும், நான்கு வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர். அவரது மறைவு அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜிதேந்திர குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் அவரது மகள் சுனிதாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ஜிதேந்திர குமாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி கவுரவ நிதியும், மனைவி மகள் சுனிதாவுக்கு அரசு வேலையும் வழங்கப்படும். பள்ளி ஒன்றுக்கு தியாகி ஜிதேந்திரா குமாரின் பெயர் சூட்டப்படும். தமண்டா கிராமத்தில் தியாகிகளின் நினைவாக நினைவிடம் கட்டப்படும்” என்று அதில் சிவராஜ்சிங் சவுகான் பதிவிட்டுள்ளார். 

Next Story