தெலுங்கானா: ஒமைக்ரான் பாதித்த சோமாலிய நபர் தப்பி ஓட்டம்..!


தெலுங்கானா: ஒமைக்ரான் பாதித்த சோமாலிய நபர் தப்பி ஓட்டம்..!
x
தினத்தந்தி 15 Dec 2021 4:48 PM IST (Updated: 15 Dec 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

சோமாலிய நாட்டை சேர்ந்த 23 வயது ஆண் நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஐதராபாத்,

ஒமைக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியா உள்பட 63-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கால்பதித்து விட்டது. இந்த வைரஸ் டெல்டா வைரசை விட அதிக வீரியமிக்கது மற்றும் அதிவேகத்தில் பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, மராட்டியம், சண்டிகர் மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒமைக்ரானின் பாதிப்பு கால் பதித்துள்ளது. மாநிலத்தில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்யாவை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் சோமாலிய நாட்டை சேர்ந்த 23 வயது ஆண் ஆகியோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தை கடந்த 12ம் தேதியன்று வந்தடைந்தனர். அவர்களுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.அவர்கள் இருவரும் எவ்வித அறிகுறிகளும் இன்றி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவரங்களை தெலுங்கானா பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஜி ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் சேர்த்து ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்கு பயணித்த 7 வயது சிறுமிக்கும் இந்த ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து மேற்குவங்காள அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சோமாஜிகுடா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சோமாலிய நபர் நேற்று இரவு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. 

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்ப்ட்டது. போலீஸ் ரோந்துப்படையினரும் அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் குழுவாக பிரிந்து தேடுதல் பணியை விரிவுபடுத்தி உள்ளனர். அவர்களிடம் காணாமல் போன சோமாலிய மாணவனின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story