இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க ரூ.76,000 கோடி நிதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க ரூ.76,000 கோடி நிதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:57 PM IST (Updated: 15 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 6 வருடங்களுக்கு செமிகண்டக்டர் சிப் மற்றும் அதனைச் சார்ந்த உதிரி பாகங்களை தயாரிக்க ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர். 

அப்போது செமிகண்டக்டர்கள் என்று அழைக்கப்படும் குறைகடத்திகள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்திக்கான சூழல் அமைப்பை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

அடுத்த 6 ஆண்டுகளில் செமிகண்டக்டர்கள் உற்பத்திகாக 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரூபே, டெபிட் கார்ட் மற்றும் சிறிய அளவிலான BHIM UPI மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதற்கு 1,300 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

2021-26 பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனாவை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Next Story