லக்கிம்பூர் விவகாரம்; எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு


லக்கிம்பூர் விவகாரம்; எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 2:40 PM IST (Updated: 16 Dec 2021 2:40 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும், இரு அவைகளிலும் லக்கிம்பூர் விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ந்தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தின்போது மத்திய மந்திரி மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்தனர்.  இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

விவசாயிகள் தந்த புகாரின் அடிப்படையில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.  விவசாயிகளை இடித்து தள்ளியப்படி சென்ற செயல் இருவரின் நன்கு திட்டமிடப்பட்ட சதி செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தெனி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.  அவையில் உறுப்பினர்களை அமரும்படி அவை தலைவர் கோரினார்.

எனினும், எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.  இதனை தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் முடங்கின.  இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story