மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை-பத்திரமாக மீட்பு


மத்தியபிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை-பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 9:52 PM GMT (Updated: 16 Dec 2021 9:52 PM GMT)

மத்தியப்பிரதேசத்தில் ஒரு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையின் குரலை தாயால் கேட்க முடிந்ததே தவிற, அவரால் எதுவும் செய்ய முடிவில்லை.  உடனடியாக  இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர். மேலும், தலைமை செயல் அதிகாரி, தாசில்தார் மற்றும் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதற்கிடையில், குவாலியரில் இருந்து பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க மீட்பு குழுவினர், போலீசார், ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 20 அடிக்கு  பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் மீட்புப்படையினர் குழந்தையை பலமணிநேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் பத்திரமாக மீட்டனர்.


Next Story