சசிகலாவுக்கு எதிரான வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


சசிகலாவுக்கு எதிரான வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2021 5:33 AM IST (Updated: 17 Dec 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளுக்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய வழக்கில் 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்னர். 

இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். 

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் சசிகலா மீதான இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டது. இந்த மனு மீது தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் துறை செயலாளர் சார்பில் வக்கீல், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு போலீஸ் துறை மந்திரியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஒருவேளை 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், போலீஸ் துறை செயலாளர் (உள்துறை செயலாளர்) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கே.அரவிந்த் ஆஜரானார்.

Next Story