எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சிகள் அமளியால் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடர் வருகிற 23ந்தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில், புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு ஆகியவற்றுக்கு எதிரான அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கி போயின.
இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவை செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் மற்றும் 2வது வாரத்தில் முறையே 49.70 சதவீதம் மற்றும் 52.50 சதவீதம் என்ற அளவில் அவை நடவடிக்கைகள் இருந்தன.
எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 3வது வாரம் முடங்கியது. இதனால், கூட்டத்தொடரின் 3வது வாரத்தில் மொத்தம் 10 மணிநேரம் 14 நிமிடங்களே மேலவை இயங்கியுள்ளது. மொத்தமுள்ள 27 மணிநேரம், 11 நிமிட அமர்வு நேரத்தில் 62.40 சதவீதம் வீணானது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், நாடாளுமன்ற மேலவை இன்று கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நாடாளுமன்ற மேலவையில் நேற்று நடந்த வர்த்தக ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த கூட்டம் பற்றி சரியான நேரத்தில் தகவல் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தன. இந்நிலையில், இன்று மேலவை கூடியதும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் பற்றி அவையில் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளியால் அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவை தொடர்ந்து முடங்கி வருவது அதன் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story