தமிழக மீனவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை: மத்திய அரசு


தமிழக மீனவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை: மத்திய அரசு
x
தினத்தந்தி 21 Dec 2021 9:28 PM IST (Updated: 21 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.  இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர். 

இரண்டு நாட்களில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறியதாவது:- தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 68 மீனவர்களும் 10 படகுகளும் இலங்கை கஸ்டடியில் உள்ளன.  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சந்தித்த தூதரக அதிகாரிகள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மீனவர்களை சந்தித்தனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை அளித்தனர். சட்ட ரீதியான உதவிகளையும் தூதரக அதிகாரிகள் செய்துள்ளனர்.  இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்க வலியுறுத்தி இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் இவ்விவகாரத்தை எடுத்துச்சென்றுள்ளது” என்றார். ---


Next Story