காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை - ஹரிஷ் ராவத் அதிருப்தி
காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.
டேராடூன்,
பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.
தேர்தல் பிரசார குழு தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பு தனக்கு கிடைக்கவில்லை என்று வேதனையாக தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவுகளில் கூறியிருப்பதாவது:-
நான் தேர்தல் என்றும் பெருங்கடலில் நீந்த வேண்டி இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் இங்கு முதலையை இறக்கி விட்டுள்ளனர். யாருடைய உத்தரவின்பேரில் நான் நீந்துகிறேனோ, அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் எனது கையையும், காலையும் கட்டிப்போடுகிறார்கள்.
உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, பெரும்பாலான இடங்களில் தலையை திருப்பிக்கொண்டும், எதிர்மறையாகவும் செயல்பட்டு வருகின்றனர். இது வினோதமாக இருக்கிறது.
அதனால், சில நேரங்களில் என்னுள் ஒரு குரல் கேட்கிறது. ‘‘போதும், ஹரிஷ் ராவத். நீண்ட தூரம் நீந்தி விட்டாய். ஓய்வெடுத்துக்கொள்’’ என்கிறது. நான் குழப்பத்தில் இருக்கிறேன். புத்தாண்டு எனக்கு வழி காட்டட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story