பழைய டிவி-க்கு பணம் கொடுப்பதில் தகராறு; மனைவியை குத்திக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
பழைய டிவி வாங்கியதில் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியை குத்திக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை நகரம் சப் அர்பன் சண்டகுரூஸ் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் அபவாலி (42). இவரது மனைவி ஊர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மதுப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஊர்மிளா பழைய டிவி ஒன்றை டிவி மறு விற்பனை செய்யும் கடையில் இருந்து வாங்கியுள்ளார். அந்த டிவியை கடை ஊழியர் ஊர்மிளாவின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது, டிவி-க்கான தொகையை கடை ஊழியர் கேட்டுள்ளார். இதனையடுத்து, தான் டிவி வாங்குவதற்காக வீட்டில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஊர்மிளா தேடியுள்ளார். ஆனால், தான் பல மாதங்களாக சேமித்து வைத்திருந்த அந்த பணத்தை தனது கணவர் சந்தோஷ் எடுத்துவிட்டார் என்பது ஊர்மிளாவுக்கு தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த ஊர்மிளா தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாடிவிட்டதாக டிவி கொடுக்க வந்த விற்பனையாளரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்ட ஊர்மிளாவின் கணவன் சந்தோஷ் தான் பணத்தை எடுத்ததை வெளிநபரான டிவி விற்பனையாளரிடம் தனது மனைவி கூறியதால் ஆத்திரமடைந்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தோஷ் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது மனைவி ஊர்மிளாவை குத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஊர்மிளா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஊர்மிளா அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த சந்தோஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மும்பை கீழமை கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், டிவி வாங்கியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை கணவன் சந்தோஷ் கத்தியால் குத்திக்கொன்றது நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து குற்றவாளி சந்தோஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story