சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை; இன்று மண்டல பூஜை


சபரிமலையில் அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை; இன்று மண்டல பூஜை
x
தினத்தந்தி 26 Dec 2021 1:21 AM IST (Updated: 26 Dec 2021 6:00 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று தங்க அங்கி அணிவித்து அய்யப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தங்க அங்கி ஊர்வலம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. சிகர நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.50 மணி முதல் மதியம் 1.15 மணி-க்குள் மண்டல பூஜை நடைபெறும்.

திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22-ந் தேதி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

இந்த ஊர்வலம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பை வந்து சேர்ந்தது. பின்னர் பம்பை கணபதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின் தங்க அங்கி அடங்கிய பேழையை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் தலை சுமையாக சபரிமலைக்கு சுமந்து வந்தனர்.

பின்னர் மாலை 5.15 மணிக்கு ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தது. அங்கு தேவசம்போர்டு ஊழியர்கள் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து 6.25 மணிக்கு 18-வது படி அருகே தங்க அங்கி வந்து சேர்ந்தது. அங்கு செயலாளர் ஜோதிலால், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், கோட்டயம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பி.கே.ஜெயஸ்ரீ, கூடுதல் டி.ஜி.பி. எஸ்.ஸ்ரீஜித் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தங்க அங்கியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டு 18-ம் படி வழியாக, கருவறைக்கு கொண்டு சென்றனர்.

மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அங்கு கூடியிருந்த அய்யப்ப பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா... என சரண கோஷம் முழங்க சாமியை வழிபட்டனர். பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

மண்டல பூஜை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.50 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

மகர விளக்கு பூஜை

மீண்டும் மகர விளக்கு பூஜையையொட்டி அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 31-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி நடக்கிறது.


Next Story