மும்பை ராஜ்பவனில் ஆளும் கட்சி மந்திரிகள் கவர்னருடன் சந்திப்பு


மும்பை ராஜ்பவனில் ஆளும் கட்சி மந்திரிகள் கவர்னருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 27 Dec 2021 12:33 AM IST (Updated: 27 Dec 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

ராஜ்பவனில் நேற்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த ஆளும் கட்சி மந்திரிகள் சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்த அனுமதி கோரினார்.

நானா படோலே ராஜினாமா

மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவியை வகித்த நானா படோலேவுக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்போற்றுக்கொண்டார். இதையடுத்து சபாநாயகர் பதவி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ளது.

இந்தநிலையில் தற்போது நடந்துவரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) புதிய சபாநாயகருக்கான தேர்தலை நடத்த ஆளும் மகாவிகாஸ் அகாடி கட்சி திட்டமிட்டுள்ளது.

கவர்னருடன் சந்திப்பு

இந்தநிலையில் சிவசேனாவை சேர்ந்த புறநகர் மேம்பாட்டுத்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி பாலாசாகேப் தோரட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உணவு மற்றும் வினியோகத்துறை மந்திரி சகன் புஜ்பால் ஆகியோர் நேற்று மாலை ராஜ் பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பாலாசாகேப் தோரட் கூறியதாவது:-

கடிதம் ஒப்படைப்பு

மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் கோரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எழுதிய கடிதத்தை கவர்னரிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் மறைமுக வாக்கெடுப்புக்கு பதிலாக குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தலை நடத்துவதற்கு சட்டமன்ற விதிகளில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் குறித்தும் எடுத்துரைத்தோம்.

இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் விவாதித்து கூடுதல் தகவல்களை பெற்று தனது முடிவை தெரிவிப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் ஒப்புதல்

இதேபோல மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறையில் மாற்றம் விதிகளின்படி செய்யப்படுகிறது. எனவே இதற்கு விரைவில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

இந்த சந்திப்பின் போது 12 பா.ஜனதா எம்.பி.க்கள் சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்தோ அல்லது கவர்னர் ஒதுக்கீட்டில் உள்ள 12 சட்ட மேல்-சபை உறுப்பினர்கள் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்படவில்லை” என்றார்.


Next Story