சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும்: மத்திய அரசு தகவல்
சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி மட்டுமே போடப்படும். பெரியவர்களுக்கு 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், 3-வது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த 25-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந் தேதி தொடங்கும் என்று அவர் அறிவித்தார். சுகாதார, முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10-ந் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த நெறிமுறைகள், ஜனவரி 3-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்கள், தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள். அதாவது, 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இந்த வயது சிறுவர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே செலுத்தப்படும். அவர்கள் ‘கோவின்’ இணையதளத்தில் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதுபோல், சுகாதார, முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசி போடுவதற்கான தகுதி, அவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட தேதி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் முடிந்த பிறகு, அதாவது 39 வாரங்கள் கழித்து, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
‘கோவின்’ இணையதளத்தில் உள்ள தேதிப்படி, 9 மாதங்கள் ஆனவுடன் அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல், தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறும். 60 வயதை தாண்டியவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோர் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று போட்டுக்கொள்ளலாம்.
‘கோவின்’ இணையதளத்தில் ஏற்கனவே உள்ள கணக்கை பயன்படுத்தியோ, அல்லது செல்போன் மூலம் புதிய கணக்கு உருவாக்கியோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் நேரில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.
வருமானத்தை பொருட்படுத்தாமல், தகுதியுள்ள அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். பணம் செலுத்த முடிந்தவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.
‘கோவின்’ இணையதளத்தில் சிறுவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி ஜனவரி 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தகவலை இணையதளத்தை நிர்வகிக்கும் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
‘கோவின்’ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய என்னென்ன அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாணவர்கள், ஆதார் அட்டையோ, இதர அடையாள அட்டைகளோ இல்லாமல் இருக்கலாம்.
இதை கருத்திற்கொண்டு, பெயர் பதிவுக்கு மாணவர் அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story