வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் - சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி


வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் - சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 28 Dec 2021 6:23 PM IST (Updated: 28 Dec 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

வாசனை திரவிய வியாபாரி வீட்டில் 257 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் அகிலேஷ் யாதவ் மீது பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வாசனைப் பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர்.  

120 மணி நேரம் நடைபெற்ற இந்த மெகா ரெய்டில் ரூ.257 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதோடு 16 ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 2 சொத்துக்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதோடு 23 கிலோ தங்கமும், 250 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.  

இதற்கிடையில், வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, வாசனைபொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயினுக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிற்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்டி நிறைய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எதிர்க்கட்சியின் (சமாஜ்வாதி) வேலைதானா? இப்போது, அவர்கள் கடன் வாங்குவார்களா? இல்லையா?.  2017-ம் ஆண்டுக்கு முன் மாநிலம் முழுவதும் பரவிய ஊழல் வாசனை மீண்டும் மக்கள் முன் வந்துள்ளது’ என்றார்.

பெட்டி நிறைய பணம் வெளியே வந்துள்ளது. இதுவும் எங்களால் தான் நடைபெற்றது என அவர்கள் (சமாஜ்வாதி கட்சி) கூறுவார்கள். கான்பூர் மக்களுக்கு தொழில் செய்ய தெரியும் அவர்கள் நன்றாக வியாபாரம் செய்வார்கள். 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற வாசனை திரவிய ஊழல் தற்போது அனைவரும் பார்க்கும் வகையில் உத்தரபிரதேசம் முழுவதும் வீசியுள்ளது' என்றார்.

இதற்கிடையில், அம்மாநிலத்தின் சுல்தான்பூரில் மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அமித்ஷா, சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த வாசனை திரவிய தொழிலதிபர் (பியூஷ் ஜெயின்) பிடிபட்டார். அகிலேஷ் (சமாஜ்வாதி கட்சி தலைவர்) நெளிகிறார். சோதனையை நடத்தியது ஏன் என கேட்கிறார். 250 கோடி ரூபாய் பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அகிலேஷ் இந்த பணம் எங்கிருந்து வந்தது?’ என கேள்வி எழுப்பினார்.

Next Story