ஜன்னலை உடைத்து வேறு ஒருவருடன் மனைவி ஓட்டம்; கண்டுபிடித்து தந்தால் ரூ 5000 பரிசு கணவர் அறிவிப்பு


ஜன்னலை உடைத்து வேறு ஒருவருடன் மனைவி ஓட்டம்; கண்டுபிடித்து தந்தால் ரூ 5000 பரிசு கணவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2021 3:58 PM IST (Updated: 29 Dec 2021 3:58 PM IST)
t-max-icont-min-icon

ஜன்னலை உடைத்து வேறு ஒருவருடன் ஓடிய என் மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் ரூ. 5000 பரிசு தருகிறேன் என ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கொல்கத்தா

மேற்குவங்க மாநிலம் பிங்கலா எனும் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்போது ஐதராபாத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவியும், குழந்தையும் அவருடைய பெற்றோருடன் சொந்த கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று இவருடைய மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வேறு ஒருவருடன் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்து மறுநாள் அவர் தனது கிராமத்துக்கு சென்றிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளித்திருப்பதாக கூறும் அந்த தச்சுத் தொழிலாளி பல்வேறு இடங்களில் தனது மனைவி, குழந்தையை தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக பேஸ்புக்கில் உதவியை நாடியிருக்கிறார். தனது பேஸ்புக் பக்கத்தில் மனைவி, குழந்தையை தேடி அலைகிறேன், யாராவது கண்டுபிடித்து கொடுத்தால் 5,000 ரூபாய் பரிசு தருகிறேன் என பதிவிட்டுள்ளார். இவருடைய உருக்கமான பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த தச்சு தொழிலாளி கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவு என் மனைவி, குழந்தையுடன் வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக வேறு ஒரு நபருடன் தப்பிச் சென்றிருக்கிறார். அந்த நபர் என் மனைவிக்கு மொபைல் போன் வாங்கி தந்திருக்கிறார். அந்த மொபைல் மூலம் இருவரும் நள்ளிரவு நேரங்களில் ரகசியமாக பேசி வந்துள்ளனர். அன்றைய தினம் நம்பர் பிளேட் இல்லாத டாடா நானோ கார் ஒன்று வீட்டின் அருகே வந்துள்ளது. என் மனைவியால் தனியாக ஜன்னலை உடைக்க முடியாது.

காரில் வந்த அந்த நபர் தான் ஜன்னலை உடைக்க உதவியிருக்க வேண்டும். என் மனைவி வீட்டிலிருந்த நகை, பணம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்.

என் மனைவி படிக்காதவர். அந்த நபர் அது வாங்கித் தருகிறேன், இது வாங்கித் தருகிறேன் என போலியாக அளித்த வாக்குறுதிகளை நம்பி அவருடன் சென்றிருக்கலாம். அவரை பாதியில் இறக்கி விட்டால் கூட வீட்டுக்கு வரத் தெரியாது.

என் வீட்டில் யாரும் மொபைல் பயன்படுத்துவது கிடையாது. அந்த நபர் வாங்கிக் கொடுத்த மொபைல் போன் தான் எல்லாத்துக்கும் காரணம். வீட்டில் உள்ள அனைவரும் என் மனைவி, குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறோம்.

இதற்கு முன்னரும் கூட என் மனைவி வீட்டில் இருந்து சென்றிருக்கிறார். ஆனால் பழைய நிகழ்வுகளை பற்றி எனக்கு கவலையில்லை. நான் என் மனைவி, குழந்தைக்காக காத்திருக்கிறேன்.  நான் அவர்களுடன் வாழ வேண்டும், அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு தருகிறேன்” இவ்வாறு அந்த தச்சுத் தொழிலாளி பதிவிட்டிருப்பது உருக்கமாக உள்ளது.

Next Story