பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்யும் குழுவில் ஒரே பெண் எம்.பி. ...!


பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்யும்  குழுவில் ஒரே பெண் எம்.பி. ...!
x
தினத்தந்தி 3 Jan 2022 9:13 AM GMT (Updated: 3 Jan 2022 9:13 AM GMT)

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ஆய்வு செய்யும் 31 எம்.பி.க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் எம்.பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி: 

பெண்கள் தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கவும், ஆய்வு செய்யவும், எம்.பி.க்கள் குழுவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லை.

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தைத் திருமணத் தடைத் திருத்தச் சட்டம் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்து பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதைச் சட்டமாக்க முன்மொழிந்தது.

இதில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலைக்குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் வினய் சஹாஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார். 31 எம்.பி.க்கள் கொண்ட குழுவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்ற பெண் எம்.பி. மட்டுமே இடம் பெற்றுள்ளார். மீதமுள்ள 30 எம்.பி.க்களும் ஆண்கள். அதாவது பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது குறித்துப் பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் இருக்கும் நிலைக்குழுவில் பெண்கள் குறித்த பிரச்சினைகளைப் பேச பெண்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லை.

இதுகுறித்து எம்.பி. சுஷ்மிதா தேவ் கூறுகையில், “பெண்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க நிலைக்குழுவில் கூடுதலாக பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பெண்களின் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களும் பேசப்படும்” எனத் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே கூறுகையில், “பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், விவகாரங்கள் எழும்போது அதுகுறித்துப் பங்கேற்கவும், விவாதிக்கவும் நாடாளுமன்றக் குழுவில் அதிகமான பெண் எம்.பி.க்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு மக்களவை, மாநிலங்களவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதிகமான பெண் எம்.பி.க்கள் இருந்தால்தான் பல்வேறு விஷயங்களை விவாதிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவில் மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த இரு எம்.பி.க்களும் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு கட்சியின் பலத்தைப் பொறுத்து எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம் அமலுக்கு வந்தால் அனைத்து சமூகத்துக்கும் இது பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் சட்டம் செல்லாததாகும்.

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்ஸி திருமணம் விவகாரத்துச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், வெளிநாடு திருமணச் சட்டம் போன்றவற்றிலும் திருத்தம் கொண்டுவரப்படும்.

Next Story