உ.பி. அரசியலில் உச்சபட்ச பரபரப்பு: முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைந்தார்...!


உ.பி. அரசியலில் உச்சபட்ச பரபரப்பு: முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைந்தார்...!
x
தினத்தந்தி 19 Jan 2022 5:31 AM GMT (Updated: 2022-01-19T11:01:11+05:30)

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கின் மருமகள் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

முலாயம் சிங்கின் இளையமகன் பர்திக் யாதவ். இவரின் மனைவி அபர்னா யாதவ் (வயது 32). அபர்னா பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்தது.

தற்போது, அபர்னா யாதவ் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அபர்னா யாதவ் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி - பாஜக இடையே நேரடி போட்டி நிலைவி வரும் சூழ்நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவின் இணைந்துள்ள சம்பவம் உத்தரபிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்துள்ள நிகழ்வு சமாஜ்வாதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட அபர்னா யாதவிற்கு பாஜக வாய்ப்பு வழங்கும் எனலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அது சமாஜ்வாதி கட்சிக்கும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவிற்கும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தலாம்.

அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு லக்னோ காண்ட் சட்டசபை தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story