கொரோனா 3-வது அலை: அதிக உயிரிழப்புகள் இல்லை - மத்திய அரசு


கொரோனா 3-வது அலை: அதிக உயிரிழப்புகள் இல்லை - மத்திய அரசு
x
தினத்தந்தி 20 Jan 2022 5:11 PM GMT (Updated: 20 Jan 2022 5:11 PM GMT)

கொரோனா 3-வது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை வீசி வருகிறது. தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3 லட்சத்து 17 ஆயிரத்து 532  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 3-வது அலை ஏற்பட்டுள்ளது.  எனினும் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 94 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தப்பட்டுள்ளது; 72 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதேபோல் 15 - 18 வயதுக்கு உட்பட்டோரில் 52 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story