பத்ம பூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதல்-மந்திரி


பத்ம பூஷன் விருதை நிராகரித்த முன்னாள் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 26 Jan 2022 3:38 AM GMT (Updated: 26 Jan 2022 3:40 AM GMT)

மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

கொல்கத்தா,

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மேற்கு வங்காள மாநில முன்னாள் முதல்-மந்திரி  புத்ததேவ் பட்டாச்சார்யா தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

அவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் விருது வேண்டாம் என கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அவர் 2000 முதல் 2011 வரை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பதம் பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீரஜ் சோப்ரா, சோனு நிகாம் உள்ளிட்ட மொத்தம் 107 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு. இதில் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சவுகார் ஜானகி என தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதை இதற்கு முன் நிராகரித்தவர்கள்: 

சினிமா கதாசிரியர் சலீம் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை நிராகரித்தார். 2005 ஆம் ஆண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் ரோமிலா தாப்பார் தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம் பூஷண் விருதை நிராகரித்தார். 1974ல் அவருக்கு அளிக்கப்பட்ட விருதை இந்திய ராணுவ சீக்கியக் கோயிலில் நடத்திய தாக்குதலைக் கண்டித்து 1984ல் அவ்விருதை திருப்பியளித்தார். நடிகர் குஷ்வந்த் சிங், 1974ல் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை 1984ல் நிராகரித்தார்.  இருப்பினும் 2007ல் வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story