கொரோனா தடுப்பூசி கட்டாயத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


கொரோனா தடுப்பூசி கட்டாயத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:51 PM GMT (Updated: 31 Jan 2022 6:51 PM GMT)

கொரோனா தடுப்பூசி கட்டாயத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஜேக்கப் புலியல், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய தடுப்பூசிக்கான நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அனைவரது பாதுகாப்பு கருதித்தான் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முழுவீச்சில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு குறைய தொடங்கியது.

அடிப்படை சுதந்திரத்தை மக்கள் தங்களது விருப்பம்போல பயன்படுத்த ஆரம்பித்தால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துவிடும். இந்த பிரமாணபத்திரத்தை ஏற்று, ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், நாட்டில் 90 சதவீத மக்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் தடுப்பூசியை காட்டிலும் இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலை இழந்து வருகின்றனர் என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு விரைவில் பட்டியலிடப்படும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story