நாடே எதிர்பார்த்த பட்ஜெட் 2022- முக்கிய அம்சங்கள் என்னென்ன...?


நாடே எதிர்பார்த்த பட்ஜெட் 2022- முக்கிய அம்சங்கள் என்னென்ன...?
x
தினத்தந்தி 1 Feb 2022 1:42 PM IST (Updated: 1 Feb 2022 5:01 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல்  செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார். இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். 

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.   சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையைத்  தொடங்கிய அமைச்சர் 12.30 மணிக்கு நிறைவு செய்தார்.  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: 

நதிகள் இணைப்பு

நதிகள் இணைப்பு தொடர்பான 5  திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பார்வத்மாலா' திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட  மாணவர்கள் கல்வி கோவிட் பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   9.05 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம், 65 லட்சம் மக்களுக்கு குடிநீர், நீர் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் வழங்க ரூ.44,605 கோடியில் கென்-பெட்வா இணைப்பு எடுக்கப்படும். கொரோனா தொற்றுநோய் மனநலப் பிரச்சினையை போக்க தேசிய தொலை நோக்கு மனநலத் திட்டம் தொடங்கப்படும்.

இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு

நாட்டில் ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்; வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய டிரோன்கள் பயன்படுத்தப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு  நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.  விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது.  பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு; வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்

இ பாஸ்போர்ட்

 வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து; தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம்.

 டிஜிட்டல் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். வட மாநிலங்களில் உள்ள எல்லைப்புற கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைப்புற கிராமங்களில் சுற்றுலா, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். 

நகர்ப்புறங்களை மேம்படுத்தவும், திட்டங்களை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும்; இன்னும் 25 ஆண்டுகளில் 50% மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள். கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களும் மனநலம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர்; தேசிய அளவில் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க டெலி மருத்துவ வசதி உருவாக்கப்படும். 

தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் 

1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும். அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்.

எரிசக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் . சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு ; உள்நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும். 

5 ஜி வசதி 

2025 ஆம் ஆண்டுக்குள் 100% ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி உருவாக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68%  நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். 2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி. நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்; அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி  ஏற்படுத்தித் தரப்படும். 
2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  

டிஜிட்டல் கரன்சி

ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தின் அறிமுகம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும். மலிவான நாணய மேலாண்மை அமைப்புக்கு வழிவகுக்கும்.கிரிப்டோ கரன்சி போன்ற மெய்நிகர் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள்  விற்பனை அல்லது கையகப்படுத்துதலின் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.  2022 ஜனவரி மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,40,986 கோடியாகும், இது ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதிகபட்ச தொகையாகும்.

ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு

நில ஆவணங்களை கணினிமயமாக்கி, 'ஒரே நாடு - ஒரே பத்திரப்பதிவு' திட்டம் ஊக்குவிக்கப்படும்.நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் ; தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68%  நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.  ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதிகள் குறைக்கப்படும்.

வருமான வரி உச்ச வரம்பு

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி 2 ஆண்டுகள் அவசாகம் வழங்கப்படும். தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது.   ஸ்டார்ட் அப்களுக்கான வரிச்சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கான வரிச் சலுகைகள் மார்ச் 31, 2023 வரை இணைக்கப்படும்

மெய்நிகர் டிஜிட்டல் சொத்தைப் பரிசாகப் பெற்றால் வாங்குபவருக்கு வரி விதிக்கப்படும்.டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும். மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் முதலாளிகள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்த முன்மொழிகிறது.

கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆக குறைக்கப்படும். கார்ப்பரேட் கூடுதல் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும். வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்படுகிறது.

நெடுஞ்சாலை திட்டம்

நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கிமீ தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.விவசாயிகளுக்கும், தொழில் துறையினருக்கும் உதவி புரியும் வகையில், ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டமானது குறிப்பிட்ட ஒரு பகுதியிலான உற்பத்திப் பொருளுக்கு ஊக்கமளிக்கும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

400- வந்தே பாரத் ரெயில்

பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தேபாரத் ரெயில்கள் அறிமுகப்ப்டுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். மெட்ரோ அமைப்புகளை புதிய வகையில் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்’ என்றார்.


Next Story