ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்!


ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்!
x
தினத்தந்தி 1 Feb 2022 5:32 PM IST (Updated: 1 Feb 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை கோடிட்டுக் காட்டி, நிகழ்கால கட்டத்தை பற்றி கவனம் கொள்ளாமல் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:- 

மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜி.எஸ்.டி வருமான வரி சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முன்வரவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ விலைவாசி உயர்வை குறைக்கவோ நடவடிக்கை இல்லை. 

சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.

ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றிருந்தது. இதன்மூலம், ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி.நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது தான் நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் உரை இதுதான்.
மூலதன செலவு, வட்டியில்லா கடன், சுருக்கமான உரையை தவிர வேறெதுவும் அதில்  குறிப்பிடும்படி இல்லை. 

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை கோடிட்டுக் காட்டினார் நிதியமைச்சர். அதனால் தற்போதைய நிகழ்கால கட்டத்தை பற்றி கவனம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு நம்புகிறது. எனவே, அவர்கள் அறிவித்துள்ள அந்த  ‘அமிர்த காலம்' விடியும் வரை பொதுமக்கள் பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இது இந்திய மக்களை கேலி செய்யும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story