கர்நாடக மந்திரிசபையில் அதிரடி மாற்றம்; பசவராஜ்பொம்மை நாளை டெல்லி பயணம்
கர்நாடக மந்திரிசபையில் இருந்து 12 மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சி மேலிட தலைவர்களுடன் விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார்.
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
மந்திரிசபை விரிவாக்கம்
இந்த ஆட்சி காலம் அடுத்த ஆண்டு (2023) மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இதனால் பா.ஜனதாவை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கர்நாடக மந்திரிசபையை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். மந்திரிசபையில் தற்போது 4 இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ரேணுகாச்சார்யா உள்பட மூத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
நாளைடெல்லி பயணம்
கட்சி மேலிடம் அனுமதி வழங்கினால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய தயார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் பற்றி ஆலோசிப்பதற்காக பசவராஜ் பொம்மை நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன் பிறகு அவர் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.
12 மந்திரிகளை நீக்க திட்டம்
ஆனாலும் மந்திரிசபை விஸ்தரிப்பு உடனடியாக நடக்க வாய்ப்பு இல்லை என்றும், 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகே நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மந்திரிசபை மாற்றம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின்போது, மந்திரிசபையில் சரியாக செயல்படாத 12 மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க பசவராஜ் பொம்மை திட்டமிட்டு உள்ளார்.
அதாவது எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, என்.மகேஷ், திப்பாரெட்டி, பூர்ணிமா சீனிவாஸ், தத்தாத்ரேயா ரேவூர், பசனகவுடா பட்டீல் யத்னால் மற்றும் என்.ரவிக்குமார் எம்.எல்.சி., விஜயேந்திரா (முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன்) ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல் மந்திரிசபையில் இருந்து கோவிந்த் கார்ஜோள், ஈசுவரப்பா, மாதுசாமி, பி.சி.பட்டீல், நாராயணகவுடா உள்ளிட்டோரை நீக்கவும் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார்.
ரேணுகாச்சார்யாவுக்கு அழைப்பு
எடியூரப்பா, தனது மகனுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தியுள்ளார். முதல்-மந்திரியும் அவருக்கு பதவியை பெற்றுக்கொடுக்க பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் பேச இருக்கிறார். அதிகளவில் புதிய முகங்களுடன் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டால் மக்களிடம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலை பெரிதாக இருக்காது என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.
ஆனால் மந்திரிசபையை மாற்றி அமைத்தால் பதவி இழப்பவர்கள், பதவி கிடைக்காதவர்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவார்கள். அவர்களை சமாளிக்க வாரிய தலைவர் பதவி வழங்கவும் முதல்-மந்திரி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடத்தின் அழைப்பின் பேரில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நாளை டெல்லிக்கு செல்கிறார்.
பா.ஜனதாவில் சலசலப்பு
அவர் அங்கு கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது அவருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. ரேணுகாச்சார்யா, சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது கர்நாடக பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மந்திரி பதவி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தவும் அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.
இருப்பினும் கர்நாடக மந்திரிசபை மாற்றத்தால் பா.ஜனதாவில் மீண்டும் சலசலப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Related Tags :
Next Story