திருப்பதி: 15-ந்தேதி முதல் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள்..?!
திருப்பதியில் 15-ந்தேதி முதல் பக்தர்களுக்கு நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானை வழிபட சாதாரணப் பக்தர்களுக்கு 15-ந் தேதி முதல் நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதியில் இருந்து நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் நடந்தது.
கூட்டத்துக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பிறகு கே.எஸ்.ஜவகர்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந்தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், வருகிற 15-ந்தேதியில் இருந்து சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
திருமலையில் ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி அருகில் அஞ்சனாத்திரிமலையில் ஆஞ்சநேயர் கோவில் விரிவாக்கப் பணிகளுக்காக வருகிற 16-ந்தேதி பூமி பூஜை நடக்க உள்ளது.
ஆஞ்சநேயர் கோவிலில் சிதலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படும். அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மலைப்பாதைகள் சீரமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28 ஆயிரத்து 410 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14 ஆயிரத்து 831 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 8 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story