சமாஜ்வாடிக்கு ஆதரவாக லக்னோவில் மம்தா பானர்ஜி பிரச்சாரம்


சமாஜ்வாடிக்கு ஆதரவாக லக்னோவில் மம்தா பானர்ஜி பிரச்சாரம்
x
தினத்தந்தி 8 Feb 2022 1:00 PM IST (Updated: 8 Feb 2022 1:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும் உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் கோவாவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. 

உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் மார்ச் 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகிலேஷ் யாதவ் அழைப்பின் பேரில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சமாஜ்வாடியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய லக்னோவிற்கு செல்வதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இன்று லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “பாஜக தனது முழு பலத்தையும் மேற்கு வங்கத்தில் நிலைநிறுத்தியது ஆனால் அவர்களால் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடியவில்லை. 

மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து லக்னோவுக்கு வந்துள்ளார். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ‘மோசமான வானிலை’ எனக் கூறி டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு வரவில்லை. பாஜகவின் பொய் விமானம் இந்த முறை உத்தர பிரதேசத்தில் தரையிறங்க முடியாது” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றிபெறச் செய்து, பாஜகவை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்... நான் வருகிற மார்ச் 3ம் தேதி வாரணாசிக்கும் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Next Story