இந்தியாவில் உற்பத்தியை தொடங்கும் வரை டெஸ்லாவுக்கு வரி சலுகை கிடையாது - மத்திய அரசு திட்டவட்டம்
மின்சார கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் வரை டெஸ்லா நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்க பணக்காரர் எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் மின்சார கார் உற்பத்தியில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இதற்கிடையில், டெஸ்லா கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் டெஸ்லா கார்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், தங்கள் கார்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெஸ்லா நிறுவனம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு இறக்குமதி வரியில் சலுகை அளிக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் விடுத்த கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கனரக தொழில்துறை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் கூறுகையில், டெஸ்லா நிறுவனம் தங்கள் மின்சார கார் உற்பத்தியை சீனாவில் மேற்கொள்கிறது. அந்த கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது. சீன வேலையாட்களையும், இந்திய சந்தையையும் பெற டெஸ்லா நிறுவனம் விரும்புகிறது. அது மோடி அரசாங்கத்தில் நடைபெறாது.
இந்திய சந்தை பயன்படுத்தப்படவேண்டுமானால், வேலை வாய்ப்புகள் இந்தியர்களுக்கே வழங்கப்படவேண்டும் என்பதே எங்கள் அரசின் கொள்கையாகும். மின்சார கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கும் வரை டெஸ்லா நிறுவனத்திற்கு இறக்குமதி வரியில் சலுகை கிடையாது’ என்றார்.
Related Tags :
Next Story